துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் மாரியப்பனுக்கு, காவல்துறை தலைவர் சங்கர்ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் முனியசாமி, விக்னேஷ் காவலர்களுடன் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்தூர் பாலத்தில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆத்தூர் பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். இதைக் கண்ட ஆய்வாளர் மாரியப்பன் துரிதமாக செயல்பட்டு, காவலர்களுடன் உதவியுடன் ஆற்றில் இறங்கி 65 வயது பெண்ணை மீட்டு, அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதையடுத்து அப்பெண் உடல்நலத்துடன் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் வேகமாக பரவியது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு குவித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை இயக்குநர் சங்கர்ஜிவால், ஆய்வாளர் மாரியப்பன், காவலர்கள் முனியசாமி, விக்னேஷ் ஆகயோரை நேரில் அழைத்து பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.