“வேலு நாச்சியார் காவியம்’ கல்லூரி பாடங்களாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் ஆவல் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜன 20.
செங்கல்பட்டு மாவட்டம் உலகத் திருக்குறள் பேரவையின் 17-ஆம் ஆண்டு முப்பெரும் விழா, சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்றது. உலகத் திருக்குறள் பேரவை தலைவர் புதுகை வெற்றிவேலன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அ.அ.நக்கீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஓய்வுப்பெற்ற ஏடிஜிபி வனிதாவுக்கு , வேலு நாச்சியார் விருது வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசிய அவர், வேலுநாச்சியார் காவியம் 6-ஆவது காவியமாக உள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வேலு நாச்சியார் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியுள்ளார். நீதிபதி சுரேஷ்குமார் வேலுநாச்சியார் சிலை வைக்க கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வேலு நாச்சியாருக்கு சிலை அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளது. வேலுநாச்சியாரின் வரலாறு தமிழக அரசின் 6-ஆம் வகுப்பு பாடங்களில் இடம் பெற்றுள்ளது. அதேபோல், வேலு நாச்சியார் காவியம் கல்லூரிகளில் பாடங்களாக கொண்டு வர வேண்டும். இதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார். ஓய்வுபெற்ற ஏடிஜிபி வே.வனிதா பேசுகையில், பெண்களும் அனைத்து துறைகளிலும் அச்சமின்றி முன்னெற
வேலு நாச்சியாரை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பத்மநாபன், கற்பகவள்ளி, சிந்தாமணி ஆகியோருக்கு திருக்குறள் அறநெறி விருது, மற்றும் 10,000 ரூபாய்க்கான பொற்கிழி வழங்கினர்.
முன்னதாக, நடனலோகா நாட்டிய பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சியும், 2024-ஆம் ஆண்டு முற்றோதலில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், நடன மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் செங்கல்பட்டு மாவட்டம் உலகத் திருக்குறள் பேரவை செயலர் பிச்சை வள்ளிநாயகம், புரவலர்கள் முருகன், கணேசன் சேப்ளார், மு.பா., சென்னை மாநிலக் கல்லூரி தமிழ் பேராசிரியர் முன்னாள் முதல் பதிவாளர் முத்துவேலு, புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி பேராசிரியர் மு.பா, புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் செயலர் மகா சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.