மயிலாடுதுறையில் மதுபாட்டில்கள் கடத்திய  நபரை கைது  செய்ய சென்ற இடத்தில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

போலீசார் பொதுவாக குற்றவழக்கில் சிக்குவோரை கைது செய்ய வீடுகளுக்கு செல்வார்கள். அப்போது அவர்களை கைது செய்யவிடாமல் மனைவி மற்றும் உறவினர்கள் தடுப்பது உண்டு. சில நேரங்களில் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் வாதிடுவார்கள். அப்போது போலீசார், என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் என்பதை தெளிவாக விளக்குவார்கள். அதன்பிறகு கைது செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதுக்கு ஒத்துழைக்க மறுத்தால், பலவந்தமாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதேநேரம் கைதை தடுக்கும் முயற்சியில் உறவினர்கள் அல்லது மனைவி அல்லது யாராவது ஒருவர் போலீசாரை மிரட்டும் வகையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவத்தில் சுபாஷினி கைதாகி உள்ளார். மயிலாடுதுறை கூறைநாடு சின்ன ஏரகலி தெருவில் வசித்து வருபவர் 38 வயாகும் சுபாஷினி. இவர் தற்போது நரேஷ் என்கிற அபினாஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். சுபாஷினியுடன், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் என்ஜினியர் ஒருவர் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு சுபாஷினி, அபினாஷ் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிலையில் அபினாஷ் மது பாட்டில்கள் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து அபினாஷை போலீசார் கைது செய்ய நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த சுபாஷினி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், பிரியங்கா மற்றும் போலீசாரை கைது செய்ய விடாமல் தடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்வதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கிருந்த பெண் போலீஸ் பரணி என்பவரை கீழே தள்ளிவிட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்தாக புகார் எழுந்தது,
இதுதொடர்பாக பெண் போலீஸ் பரணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுபாஷினியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுபாஷினி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருவாரூரில் உள்ள மகளிர் கிளை சிறையில் அடைத்தனர்.