சென்னை புழல் பகுதியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மற்றும் புகர் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், சிறுவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் இயக்குவதால் பல்வேறு இடங்களில் விபத்துகளை ஏற்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்துகளை ஏற்படுத்தும் சிறுவர்கள், சிறுமியர்களின் பெற்றோர், உறவினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றை தடுக்கும் வகையில் புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கனி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவது, சாலை விதிகள் பின்பற்றாமல் இருப்பது, ஆவணங்கள் இன்றி வாகன இயக்குவது, தலைகவசம் அணியாமல் வாகனம் இயக்குதல், வாகனம் இயக்கும்போது கைப்பேசி பயன்படுத்துதல் தண்டனைக்குரியது எனத் தெரிவித்தார்.  மேலும் பாதுகாப்பு விதிகள் குறித்து உரையாற்றினர். இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் அய்யனார், மகேந்திரன், மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.